கங்கை கொண்டு கடாரம் வென்று, பல கடல் கடந்து ஆட்சி செய்த சோழர்கள்.. சங்கம் வைத்து தமிழர் வளர்த்த பாண்டியர்கள்.. வெள்ளையர்களை ஓட ஓட விரட்டி விடுதலைக்காக வீறுகொண்டு நின்ற பூலித்தேவன், வீரமங்கை வேலுநாச்சியார், மருதுசகோதர்கள் இன்னும்.. இன்னும் எத்தனையே மா மறவர்கள் நம் மண்ணை காத்து நிற்கும் தெய்வங்கள்..ஆவர்!
ஆம்! நாங்கள் வரைந்த மன்னர்களுக்கு சொந்தக்காரர்கள் அல்ல! வரலாற்றில் வாழ்ந்த மன்னர்களுக்கு சொந்தக்காரர்கள்! நாங்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தலைவராகவும், கடவுளாகவும் ஏற்றுக் கொண்டவர்கள்! நாங்கள் சராசரி யான சாதிப்பிடிப்பு அரசியலைச் செய்யாமல், எமது சமூகத்தை அறிவுசார் தளத்திற்கு எடுத்துச் செல்லவே விரும்புகிறோம்; செயல்படுகிறோம்!
முக்குலத்தோர் புலிப்படை சாதியை மட்டுமே, உயர்த்திப் பிடிக்கும் கட்சியும் அல்ல! சாதியே கூடாது என பரப்புரை செய்யும் இயக்கமும் அல்ல!
இரண்டுக்கும் அப்பாற்பட்டு மனிதர்களுக்குள் மனித நேயத்தையும் உயிர்கள் மீதான அன்பும் அறமும் புகட்ட உருவாக்கப்பட்ட இயக்கம் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” ”யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நிகரமைக் கோட்பாட்டுச் சிந்தனையின் அடித்தளத்தை பற்றி நிற்கும் கட்சி முக்குலத்தோர் புலிப்படைக்கட்சி!
சாதி என்பது காலங்காலமாக தமிழ்ச் சமூகத்தில் வேர் பிடித்துள்ளது. அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதை உடனடியாக மாற்றிட முடியாது. சாதியை தனிமனித மாற்றத்தின் வழியாக மட்டுமே மாற்ற முடியும்!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாதி கட்சி தலைவர் இல்லை! அவரை சாதியத் தலைவராகப் பொய் பரப்புரை மூலம் காலங்காலமாக தமிழ்ச்சமூகம் மாற்றி அமைத்து விட்டது! அதை மாற்றி அவர் அனைவருக்கும் பொதுவான சமூகச் சீர்திருத்த தலைவர் என்பதை எடுத்துரைக்கவே நாங்கள் பாடுபடுகிறோம்!
முக்குலத்தோர் என்றால் என்ன? அது, தேவர் சமுதாய அடையாளச் சொல்மட்டுமா இல்லை! முக்குலத்தோர் சமுதாயம், எக்குலமும் ஏற்கும் சமுதாயம் ஆகும்.
தெய்வத்திருமகனார் தேவர், முக்குலத்தில் மூச்சு விட்டு முளைத்தவர். இந்து மதத் தாய்க்கு பிறந்து, இஸ்லாம் மதத் தாயிடம் பால்குடித்து, கிறித்துவப் பாதிரியாரிடம் வளர்ந்து, முக்குல மதத்திற்கும் அயராது உழைத்தப் பொதுவுடைமைத் தலைவர்!
அவர் ஓர் ஆன்மீக ஞானி, தேசியத் தலைவர், பொதுவுடைமைவாதி வலதுசாரி உள்ளம் கொண்ட இடதுசாரி அரசியல் தலைவர். பன்முகம் கொண்ட ஆற்றலாளர்! தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் ஆகியவற்றில் புலமைபெற்ற அறிவாளர்! அவரின் அறிவுத்தளத்திலிருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்டமைக்கப்பட்டுள்ளது!
தேவர் சாதியிலிருந்து சென்ற நமது முன்னோர் மும்மதத்திலும் இருக்கின்றனர் என்பது வரலாறு. இஸ்லாம் மதத்தில் இருக்கும் மரக்காயர், இராவுத்தர், எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன் தேவர் குலத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்கள். அதேபோல்தான் கிறித்தவ மதத்திற்கும் இடம் மாறி உள்ளனர். ஆகவே, முக்குலத்தோர் என்பது தேவர் சாதி அடையாளம் மட்டுமல்ல மூன்று மத அடையாளமும்தான்!
தேவர் அனைவருக்கும் பொதுவானவர். அதே போல் தான் முக்குலத்தோர் புலிப்படையும்! எமது கொள்கைக்குள் வரும் யாவரும் எமது முக்குலத்தோர் புலிப்படையில் அரவணைக்கப்படுவர்!
சாதி ஏற்றத்தாழ்வு நீங்கி, தலித்துகளும் தமக்கு சமமாக வாழவேண்டும் என்று நினைத்தத் தலைவர் தேவர்! அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றிவிட்டு இன்னும், மாற்று சாதியினர் கோயிலுக்கு நுழைய முடியாத சூழல்தான் இருக்கிறது. ஆனால் தலித்துகளை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைய வழி செய்த ஆன்மிகச் செம்மல் தேவர்! அவர்கள்!
ஆகவே முக்குலத்தோர் புலிப்படை தேவரின் அடிப்படை கொள்கையிலிருந்து விலகாது பயணிக்கிறது.. தொடர்ந்து பயணிக்கும்.
தமிழினத்தின் வரலாற்று பெருமித அடையாளங்களையும், தமிழ்மொழி பண்பாடு கலாச்சாரங்களையும், நமது இனமுன்னோர் பெருமைகளையும் ஏந்தியும், இன்றைய இளைய தலைமுறையினருக்கு கற்பிக்கும் எமது கட்சி. இருப்பதை காக்கவும் இழந்ததை மீட்கவும் தொடர்ந்து பாடுபடும்.
அதே போல், கல்வி உரிமை காக்கவும், இயற்கை வளத்தை மீட்கவும், தற்சார்பு பொருளாதாரத்தின் வழியாக மக்களை மேம்படுத்தவும், எமது முக்குலத்தோர் புலிப்படை வழிகாட்டும். தமிழர் உரிமைக்கான அனைத்து அறவழிப் போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்ல தொடர்ந்து களத்தில் நிற்கும். எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகம், ஏற்றத்தாழ்வுகள் நீங்கிய அறிவுச்சமூகமாக மாற தாய்மொழிக் கல்வியான தமிழ் எனும் அறிவு தீபத்தை ஏந்தி நிற்கும்!
மக்கள் அனைவரும் சமம் என்று பொதுமையை உணர்த்தி பன்முகத்தன்மைக் கொண்ட பாசறை முக்குலத்தோர் புலிப்படை கட்சி. பசும்பொன் தேவர் பள்ளியிலிருந்து படித்த நாம் அதை.. அனைவருக்கும் பறைசாற்றவே முக்குலத்தோர் புலிப்படையை கட்டி எழுப்பியிருக்கிறோம்.
குறிப்பு :
இத்தளம் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் அதிகாரப்பூர்வமான தளம்! இதில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் கட்சி தலைமையின் நேரடி மேற்பார்வைக்கு உட்பட்டே வெளியிடப்படுகிறது. பார்வையாளர்கள் இத்தளத்தில் வெளிவரும் செய்திகளை முழுமையாக நம்பலாம்! இத்தளம் மட்டுமே கட்சியின் அதிகாரப் பூர்வமான தளம் என்பதை உறுதி கூறுகிறோம்!